بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: என்னைப் போல் ஒருவனா நீ? (சினிமா விமர்சனம் : ஞாநி)


என்னைப் போல் ஒருவனா நீ? (சினிமா விமர்சனம் : ஞாநி)

>> சனி, 17 அக்டோபர், 2009

`உன்னைப் போல் ஒருவன்' என்று படத்தின் தலைப்பு சொல்கிறது.
பார்வையாளனான என்னைப் பார்த்து உன்னைப் போல் ஒருவன் என்று சொல்வதாகத்தான் பெரும்பாலும் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அது சரியான அர்த்தம்தானா ?!

படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?

நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன். என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக்கூடாது என்று விரும்பும் ஒருவன்.

குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன். சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன்.

நீ என்னைப் போல் ஒருவனா? நிச்சயம் இல்லை.

எனக்கு எல்லா தீவிரவாதமும் அருவருப்பானது. உனக்கு அப்படியில்லை. நீ இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எதிர்க்கிறாய்.

மேலவளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் முருகேசனைக் கொன்றவர்களும் , தருமபுரியில் அப்பாவியான கல்லூரி மாணவிகளை பேருந்திலேயே வைத்து எரித்தவர்களும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தைத்தாக்கி அப்பாவி ஊழியர்களைக் கொன்றவர்களும் இது போன்ற எண்ணற்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் தமிழகச் சிறைகளில்தான் இருக்கிறார்கள். அவர்களை விசாரணையில்லாமல் கொல்ல வேண்டும் என்ற கோபம் உனக்கு வரவில்லை.

இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவி செய்ததால் ஹிந்து வெடி மருந்து வியாபாரியையும் கொல்லப் புறப்படுகிறாய்.

உனக்கு ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து விற்றவன் மட்டும் மகாத்மா காந்தியா ? அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய்? அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள்/வாங்குகிறவர்கள் எல்லாரும் உன்னைப் போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன?

இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் பிடித்தால் உடனே சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று சொல்லுகிற இந்து தீவிரவாதத்தின் குரலாகவே நீ பேசுகிறாய். அப்படிச் செய்யாமல் போலீஸ் இருப்பதில் எரிச்சலடைந்து மிரட்டல் வேலையில் ஈடுபடுகிறாய்.

எந்த மதத்து தீவிரவாதியாக இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ.

அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக் கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும், அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய்.

ஆனால் உனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது.

நீ என்னைப் போல் ஒருவன் அல்லவே அல்ல. நான், குற்றம் சாட்டப்படுபவர் மோடியானாலும் சரி, முகமது ஆனாலும் சரி முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்தும் சாமான்யன்.

உன்னைப் போல் ஒருவன் என்று நீ சொல்வது என்னையல்ல என்றால், யாரைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கிறாய்?

படத்தில் இன்னொரு நாயகனாக வருகிற காவல் அதிகாரியைப் பார்த்துத்தான். அதுதான் அசல் அர்த்தம். நாங்கள்தான் எங்களைச் சொன்னதாக தப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அந்தக் காவல் அதிகாரி யார்? முதலமைச்சர், தலைமைச் செயலாளர் எல்லாரும் முழு அதிகாரத்தைத் தன்னிடம் கொடுத்தால்தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று மிரட்டுபவர் அவர். முழு அதிகாரமும் போலீஸிடம் இருந்தால்தான் விசாரணையில்லாமல் சுட்டுக் கொல்லமுடியும் அல்லவா? அவர் கருத்தும் உன் கருத்தேதான்.

கடைசியில் நீ கேட்டபடி அந்தத் தீவிரவாதிகளை ஒப்படைக்கிறார். மூன்று பேர் ஜீப் குண்டில் செத்ததும் நீ அவர் ஆள்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.

நீ எந்த இடத்திலும் குண்டு வைக்கவில்லை அது வெற்று மிரட்டல்தான் என்று பின்னர் போனில் சொல்லும்போது அது தனக்கு முன்பே தெரியும் என்கிறார். அப்படி தெரியுமென்றால், நான்காவது தீவிரவாதியை சுட்டுக் கொல்லும்படி அவர் சொல்லியிருக்கத் தேவையே இல்லையே. உன் மிரட்டலை சாக்காக வைத்து அவர் அந்தத் தீவிரவாதிகளை விசாரணை இல்லாமல் கொல்லும் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பதுதான் உண்மை.

கடைசியில் நீ இருக்கும் இடத்தையும் உன்னையும் கண்டுபிடித்த பிறகு உன்னை சுட்டுக் கொல்லாமல் கை குலுக்கி வழியனுப்பி வைக்கிறார். ஏன்? நீ அவரைப் போல் ஒருவன் என்பதனால்தான்.

காவல் துறை என்கவுன்ட்டர் என்ற பெயரில் விசாரணை இல்லாமல் தான் கொல்ல விரும்புபவர்களைக் கொல்லும் வசதிக்காக, உன்னைப் போன்றவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் என்பதுதான் உன் படத்திலிருந்து எனக்குக் கிடைக்கும் முக்கியச் செய்தி.

நீ நிச்சயம் என்னைப் போல் ஒருவன் அல்ல. நான் நிச்சயம் உன்னைப் போல் ஒருவனாக இருக்க விரும்பவே மாட்டேன்.

* * * * * * * *
சென்ற வருடம் மும்பையில் என் பிரிய நடிகர் நசிருதீன் ஷா நடித்த `எ வெட்னெஸ்டே', `ஷூட் ஆன் சைட்' என்ற படங்களைப் பார்த்ததும் இரண்டுமே தீவிரவாதம் தொடர்பானவை என்பதால், ஒப்பிட்டு எழுத நினைத்தேன். தமிழ் வாசகர்கள் இவற்றை டி.வி.டி.களாகக் கூட பார்க்கும் வாய்ப்பில்லாத நிலையில் எழுதுவதற்கான உந்துதல் குறைந்துபோய் விட்டது.

கமல்ஹாசன் `வெட்னெஸ்டே'வை தமிழில் தயாரிக்கிறார் என்ற செய்தி வந்ததும், நிச்சயம் கமல் என்ற ஸ்டாரால் நசீரின் யதார்த்தமான நடிப்பைத் தரமுடியாது என்பதால், தமிழ்ப் படம் ஹிந்தியின் தரத்தில் இருக்காது என்று கருதினேன். டெல்லி கணேஷ் மாதிரி ஒருத்தர் நடிக்க வேண்டிய ரோலில் கமல் நடித்தால் என்ன ஆகுமோ அதுதான் தமிழ் வெட்னெஸ்டேவுக்கு ஆகியிருக்கிறது.

என்னைப் பார், என் நடிப்பைப் பார் என்று ஒவ்வொரு ஃபிரேமிலும் சொல்லிக் கொண்டே நடிக்கும் பாணியில் கமல் என்ற நல்ல நடிகர் சிக்கிக்கொண்டு பல காலம் ஆகிறது. கமல் என்ற நல்ல திரைக்கதையாசிரியர், இயக்குநரையும் அந்த நடிகர் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிடுவது இன்னொரு சோகம்.

அதனால்தான் படம் முழுவதும் காமன் மேன் சூப்பர் மேனாகவே இருக்கிறான். ஒருவேளை கமல் நடிக்காமல் இயக்கத்தை மட்டும் செய்கிற எதிர்காலத்தில் இது மாறக்கூடும். காமன் மேனை காமன் மேனாகவே காட்டக் கூடும்.

இந்தப் படம் வெற்றிகரமாக ஓடுகிறது என்று சொல்கிறார்கள். மகிழ்ச்சியாகவும் கவலையாகவும் இருக்கிறது. குத்துப்பாட்டு, ஆக்ஷன், ஆபாசம், சென்டிமெண்ட் மசாலாக்கள் இல்லாமல் ஒரு படம் ஆதரிக்கப்படுவது மகிழ்ச்சிதான். ஆனால், இந்தப் படமும் வணிக ஃபார்முலாவுக்குள்ளேதான் இருக்கிறது என்பதும் வித்தியாசமான படம் என்ற முகமூடிக்குள் இருந்துகொண்டு ஆபத்தான கருத்துகளைப் பரப்புகிறது என்பதும் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.

சென்சார் விதிகளுக்கு விரோதமான முறையில் டி.வி. பப்பெட் ஷோ வழியே பகிரங்கமான பாகிஸ்தான் எதிர்ப்பு, முஸ்லிம்களை கீழ்த்தரமாகக் கிண்டல் செய்யும் வசனங்கள், வேலைக்குச் செல்லும் திறமையும் உறுதியும் உடைய நவீனப் பெண்ணை வேண்டுமென்றே சிகரெட் பிடிப்பவளாகக் காட்டும் வக்கிரம், கம்ப்யூட்டர் மேதை என்றால் அவன் பார்ப்பனனாகத்தான் இருப்பான் என்று குறிப்பாக உணர்த்தும் அபிவாதயே வசனங்களின் ஜாதியம் போன்றவை ஒரிஜினல் ஹிந்தியில் இல்லாதவை. கமல் தமிழுக்கு அளித்திருக்கும் `கொடைகள்' இவை.

பத்துப் பேரை ஒரே ஆள் தனியாக அடித்து வீழ்த்தும் ஹீரோவும் உன்னைப் போல் ஒருவன் ஹீரோவும் ஒருவன்தான். ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வைப்பது முதல் க்ைளமேக்ஸில் குண்டு வைத்த ஜீப்பை ஒரு பொட்டல் காட்டில் நிறுத்தி வைப்பதுவரை மொட்டைமாடியில் தனியாக இருந்துகொண்டே சாதிப்பது எல்லாம் விஜய் பட ஃபேண்ட்டசியின் இன்னொரு வடிவம்தான்.

மாற்று சினிமா இது இல்லை.இதுவும் இன்னொரு ஏமாற்று சினிமாதான்..
நன்றி: குமுதம்

நன்றி : குமுதம் வார இதழ் 14.10.2009

ஆர்.எஸ்.எஸ். தனது கொள்கை பரப்பு செயலாளராக கமலை அறிவிக்கலாம்.



Now, send attachments up to 25MB with Yahoo! India Mail. Learn how.

0 கருத்துகள்:

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP